உடல் பருமனாக இருப்பதே பல மன அழுத்தங்களை தரக்கூடியது. அதிலும் பருமனான பெண்ணாக இருந்துவிட்டால் மன அழுத்தம் சற்று கூடவே இருக்கும். உடல் பருமனை குறைக்க வழி செய்யும் பேரியாட்ரிக் அறுவை சிகிச்சை நிபுணர் (Bariatric Surgeon) என்ற முறையில், பருமனான பெண்களின் மனதில் உள்ள வடுக்களை நான் அறியமுடிந்த காரணத்தினால் இந்த பதிவை எழுதுகிறேன். இந்த பதிவு நிச்சயம் பருமனாக உள்ள பெண்களுக்கு மிகுந்த பலன்களை தரும் என்று நம்புகிறேன்.
ஊடகங்களாலும், சுற்றியுள்ளவர்களாலும், பருமனான பெண்களிடம் ஏற்படும் தவறான நினைப்புகள்
(1) பருமனான எவரும் அழகாக இல்லை என்ற தவறான நினைப்பு.
(2) தான் பார்ப்பதற்கு அழகாக இல்லை என்ற தவறான பார்வை. தான் பருமனாக இருப்பதால் ஒரு ஆணுக்கு தன் மீது ஈர்ப்பு இருக்காது என்ற தவறான நினைப்பு.
(3) தனக்கு உதவ யாருமில்லை என்ற ஏக்கத்தில் ஏற்படும் தாழ்வு மனப்பான்மை
(4) இருப்பதிலேயே மிக மோசமான தவறான நினைப்பு என்ன தெரியுமா? தான் பருமனாக இருப்பதால், யாரும் தன்னை நேசிக்கமாட்டர்கள் என்று நினைப்பது. இந்த தவறான நினைப்பு, பருமனான பெண்ணை மன ரீதியாகவும், உடல் ரீதியாகவும் மிகவும் பாதிப்புக்கு உள்ளாழ்த்துகிறது.
மனரீதியான வேறு பல பிரச்சனைகள்
(1) தங்களை தாங்களே குறைவாக மதிப்பிட்டுக்கொல்வது. இதற்கு ஒரு உதாரணம் சொல்லவேண்டும் என்றால், இதனால் சொந்தபந்தங்களில் நடக்கும் திருமணம் போன்ற விசேஷ காரியங்களுக்கோ, அலுவலக விசெஷம்ன்களுக்கோ, செல்லாமல், பொதுவாக கடைசி நேரத்தில் ஏதாவது பொய் சொல்லி போகாமல் தவிர்த்துவிடுவது. அங்கே செல்கையில் அங்கே பல உறவினர்களை சந்திக்கும் தருணங்களில் தங்கள் உடல் பருமன் மேலும் சங்கடங்களை ஆழ்த்தும் என்ற தவறான நினைப்பே இதற்கு காரணம்.
(2) தனக்கு மற்றவர்களை காட்டிலும் குறைவான ஆற்றலே உள்ளது என்று தவறாக எண்ணுவதால் தன்னை எல்லோரும் சோம்பேறி என்று கூறிவிடுவார்கள் என்று தவறாக எண்ணிக்கொள்வது.
(3) பொதுவாகவே பருமனான பெண்களிடம் அதிக அளவில் மன அழுத்தமும், தவிப்பும் இருக்கும். இந்த அழுத்தம் அவர்களை மேலும் அதிகமாக உணவு உட்கொள்ளத்தூண்டும். உணவு அதிகமாக உட்கொள்வது மனதிற்கு ஒரு வித தற்காலிக நிறைவை அளிப்பதால் (They learn to use food as a the mood elevator) நிறைய உண்னத் தோன்றும். இந்த அளவுக்கு அதிகமான உணவு, அவர்களை மேலும் பருமனாக்கி மேலும் மன அழுத்தத்தை தரும். இந்த மோசமான சுழலில் சிக்கித்தவிப்பார்கள். பொதுவாக 18-லிருந்து 30 வரை உள்ள பருமனான பெண்கள் அதிகமான மன அழுத்தத்தில் உள்ளார்கள் என்பது கண்கூடு.
(4) உடல் பருமனை குறைக்க முயற்சிகள் செய்து அதில் தோல்வி கண்டதனால் ஏற்பட்ட வெறுப்பும், நம்பிக்கையின்மையும் அவர்களை மேலும் மன அழுத்தத்தில் தள்ளும்.
(5) தன்னை சுற்றி நடக்கும் பல சாதாரண விஷயங்களுக்கு கூட அவர்கள் கோபமாகவே பதிலளிப்பார்கள். இந்த கோபம் அவர்களை திடமானவர்கள் என்ற எண்ணத்தை மற்றவர்களுக்கு தரும் என்று அவர்கள் தவறாக எண்ணிக்கொள்கிறார்கள். உண்மையில் அவர்களுக்கு குழந்தை உள்ளம் என்று தான் சொல்லவேண்டும். அவர்களுக்கு தேவை படுவது நம்முடைய உதவி.
(6) உடல் பருமன் பெண்களுக்கு பல மாதவிடாய் பிரச்சனைகளையும் தரும். முக்கியமாக, சரியான நாட்களில் மாதவிடாய் வராமல் தள்ளிப்போவது சாதாரணமாக நிகழும். PCOD போன்ற சிக்கல்கள் வரும். இது அதிகப்படியான மன அழுத்தத்தை தரக்கூடியது.
(7) எல்லா பருமனான பெண்களுக்கும் சில வகை ஹார்மோன் குறைபாடுகள் (Neuroendocrine Hormonal Imbalance) கண்டிப்பாக இருக்கும். இது இயல்பாகவே அவர்களுக்கு வரும். இதனை சரி செய்ய இயலும்.
சுருக்கமாக சொல்லவேண்டும் என்றால், பருமனாக உள்ள குழந்தைகளுக்கு தான் சந்திக்கும் பிரச்சனைகளை சொல்லத்தெரியாது. பருமனான பெண்களுக்கோ, தாங்கள் சந்திக்கும் பிரச்சனைகளை சொல்லத்தெரிந்தாலும், யாருடனும் அதனை பகிரத்தயாராக இல்லை. அவர்கள் வீட்டிலுள்ளவர்களுக்கே அதைப்பற்றி புரிந்துக்கொள்ள தெரியாது. அதனால் தேவைக்கு அதிகமாக உணவு உட்கொள்ளத்தொடங்கி, மேலும் பருமனாகி, மேலும் மேலும் அதிகப்படியான மன அழுத்தங்களுக்கு தங்களை தாங்களே தள்ளிக்கொல்கின்றனர். இந்த சவால்களை எல்லாம், பருமனான பெண்கள் முறியடித்து வெளிவர நிறைய வழி இருக்கிறது. தேவை மன உறுதி! சரியான வழிகாட்டுதல்!!