வழக்கமாக இந்த ஆண்டும் ஜல்லிக்கட்டு நடக்குமா, நடக்காதா என்று ஆவலுடன் உங்களுடன் நானும் சேர்ந்து எதிர்பார்த்துக்கொண்டு இருக்கிறேன். ஜல்லிக்கட்டும் தடைகள் பல கடந்து மாண்புமிகு நீதிமன்றங்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டு நல்லபடியாக நடந்தேறும் என்று எண்ணுவோம்.
ஜல்லிக்கட்டும் என் அனுபவமும்
ஒரு மருத்துவராக ஜல்லிக்கட்டு குறித்த இரண்டு நிகழ்வுகளை சொல்ல விரும்புகிறேன்.
(1) ஒரு இளைஞன், அவனுக்கு ஜல்லிக்கட்டு காளை முட்டி கால்களில் உள்ள முக்கியமான ரத்த குழாய் கிழிந்துவிடுகிறது. சற்று அஜாக்கிரதையாக இருந்துவிட்டு, வெறுமனே கட்டுகட்டி, எல்லாம் சரியாகிவிடும் என்று நினைத்துக்கொண்டு மருத்துவ சிகிச்சை எடுக்காமல் கவனக்குறைவாக இருந்துவிட்டார். இரண்டு நாட்கள் கழித்து கால்கள் வீங்கி நிலைமை மோசம் அடைந்துவிட்டவுடன், மருத்துவமனைக்கு வந்தனர். கால்களில் இரத்தம் செல்லாததால் அவை அழுகிவிட்ட நிலையில், அதை எடுத்தால் தான் உயிரை காப்பாற்ற முடியும் என்று விரிவாக எடுத்துக்கூறினோம். அதற்கு அவர் மறுத்தார். மேலும் இரண்டு நாட்கள் கடந்துவிட்ட நிலையில், உடல் நிலை மோசமடைந்த நிலையில் ஒரு வழியாக அறுவை சிகிச்சைக்கு ஒப்புதல் அளித்துவிட்டார். ஆனால் அதற்குள் அவர் நிலைமை மேலும் மோசமாகி அறுவை சிகிச்சை செய்யும் முன்பே இறந்துவிட்டார். அவர் கட்டியிருந்த மனைவிக்கு வெறும் 19 வயது தான். ஆறு மாத கருவையும் சுமந்துக் கொண்டு இருந்தார். அந்த இளம் தாய் அழுதது இன்னும் என் கண் முன் நிற்கிறது.
(2) இரண்டாவது நிகழ்வில், இளைஞர் ஒருவருக்கு ஜல்லிக்கட்டு காளை விலா எலும்புக்கு அருகே முட்டியதில் மிகவும் சிறிய காயம் தான். ஆனால் உள்ளே உள்ள நுரையீரலை பதம் பார்த்துவிட்டது. அதனால் மூச்சு விட திணறி, மரணம் அவரை தழுவிக்கொண்டது.
இந்த இரண்டு நிகழ்வையும் வைத்து பார்க்கும்போது எனக்குள் வரும் ஆதங்கத்தை பகிரவே இந்த பதிவு. நான் ஜல்லிகட்டுக்கு ஆதரவு அளிக்கும் சாமானிய தமிழன். அது நமது பாரம்பரியம் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. காளைகள் துன்புருத்தப்படுவதிலும் எனக்கு உடன்பாடு இல்லை.
தமிழக அரசாங்கம் பல கட்டுபாடுகளை விதித்து, மாடுகளின் உயிருக்கோ, மனிதனின் உயிருக்கோ எந்த அச்சுறுத்தலும் நிகழாமல் திறம்பட ஜல்லிகட்டை நடத்திய வரலாறை அறிந்தவன் என்ற முறையில், அது போல போட்டி விதிமுறைகளை ஏற்படுத்தி ஜல்லிகட்டை நடத்த வேண்டும் என்பது தான் எனது எண்ணம்.
ஜல்லிக்கட்டில் பங்குபெறும் இளைஞர்களுக்கு எனது வேண்டுகோள்கள் இதோ.
(1) ஜல்லிக்கட்டில் பங்குபெறும் இளைஞர்கள் கண்டிப்பாக மது அருந்தக்கூடாது.வீரத்தோடு விவேகமும் முக்கியம் என்பதை மறக்க வேண்டாம்.
(2) வெய்யிலில் நின்று காளையை அடக்கும் வீரகளுக்கு விரைவாக நீர் சத்தும், உப்புச் சத்தும் இழந்து சோர்வு வந்துவிடும். இந்த சோர்விலிருந்து மீள நிறைய தண்ணீர் குடியுங்கள். மோர், இளநீர் போன்ற பானங்களையும் பருகி ஜல்லிகட்டை தெம்பாக விளையாடுங்கள்.
(3) தயவு செய்து பாதுகாப்பு கவசங்களை அணிந்துக்கொள்ளுங்கள்.
(4) மாட்டுக்கொம்பின் முனைகளை மழுக்கிவிடுங்கள், அல்லது அதன் கூரான முனையில் ஏதாவது மழுங்கிய ஆபாரங்களை வைத்து பொருத்துங்கள்.
(5) மிக முக்கியமாக காளை முட்டி காயம் ஏற்பட்டால், உடனே மருத்துவமனைக்கோ அல்லது அருகே நிறுத்தப்பட்டுள்ள மருத்துவக்குழுவையோ அணுக விரையுங்கள். சிறிய காயத்தையும் அலட்சியம் செய்யவேண்டாம்.
(6) அதே போல ஜல்லிக்கட்டு காளைகளுக்கும் ஏதாவது காயம் ஏற்பட்டுள்ளதா என்று கவனியுங்கள். அப்படி ஏற்பட்டு இருந்தால், கால்நடை மருத்துவரிடம் கூட்டி செல்லுங்கள். ஜல்லிக்கட்டில் பங்குபெறும் இளைஞர்கள் மட்டுமின்றி பார்க்கும் நம் அனைவருக்கும் மகிழ்ச்சி பொங்க வேண்டும் என்பதே நமது எண்ணம். இந்த பொங்கல் அனைவருக்கும் இனிமையாக அமைய எனது உளமார்ந்த வாழ்த்துக்கள்.